×

3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது மோடி, ராகுல் தீவிர பிரசாரம்: 12 மாநிலங்களின் 94 தொகுதிகளில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

புதுடெல்லி: மக்களவைக்கு 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 3வது கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதனால், 3ம் கட்ட தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. இதில், 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாட்டின் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது. இதைத்தொடர்ந்து கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. இதில், 63 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில், மக்களவை தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் நடக்க உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கி, 19ம் தேதி முடிந்தது. 20ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. இந்த தொகுதிகளில் 2,963 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது களத்தில் 1,351 வேட்பாளர்கள் உள்ளனர். குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் சூரத் தொகுதியில் எதிர் வேட்பாளர்கள் யாரும் இல்லாததால், பாஜ வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல்கட்ட தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதனால் அது வெற்றி பெறும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவித்தன. 2ம் கட்ட தேர்தலில் இது மேலும் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பாஜ தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது. 3ம் கட்ட தேர்தலில் கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க இருப்பதால் பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஒரே நாளில் அம்மாநிலத்தில் 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார்.

இதே போல, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் 3ம் கட்ட தேர்தலுக்காக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் ஒடிசாவில் கேந்திரபாராவிலும், யூனியன் பிரதேசமான டாமனிலும் பிரசாரம் செய்தார். பாஜ, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ஓய்வின்றி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக 3ம் கட்ட தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலைத் தொடர்ந்து, 4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் மே 20ம் தேதியும், 6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதியும், கடைசி மற்றும் 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

* கர்நாடகாவில் இன்று மறுவாக்குப்பதிவு
கர்நாடகா மாநிலத்தில் 26ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், சாம்ராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட ஹானூர் பகுதி வாக்குச்சாவடியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது. அதனால் இண்டிகானத்தா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

The post 3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது மோடி, ராகுல் தீவிர பிரசாரம்: 12 மாநிலங்களின் 94 தொகுதிகளில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul ,New Delhi ,Congress ,Rahul Gandhi ,3rd phase ,phase ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மோடி அரசுக்கு எதிராக முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்: ராகுல் வேண்டுகோள்